தெருவோரப் பூக்கள் மட்டுமே தேர் மீது பவனி வரும் தெய்வமாய் அனைவருக்கும் சொந்தமாகும்

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை மலைக்கோட்டை புகைவண்டி மெதுவாகச் சென்றடையும்; விடியற்பொழுதியில் அங்கு கூடியிருக்கும் கூட்ட நெரிசலை விலக்கிக் கொண்டு பேண்ட் ஷர்ட் அணிந்த ஒரு ஒல்லியான உருவம் எங்கள் ரயில் பெட்டியை நோக்கி வரும்.

மாநிறமான முகத்திற்கு ஒளி கூட்டுவது போல் வெண்மையான பற்கள் தெரிய சிரிப்பு: சிரிப்புடன் கூடிய வரவேற்பு பேச்சு; அப்பேச்சில் ஒரு கனிவிருக்கும். அவரது கவி பாடும் திறனை சமீப காலத்தில்தான் அறிந்து கொண்டேன்.

நூலின் தலைப்பு “தெருவோரப் பூக்கள்”.  “இவை மாளிகைத் தோட்டத்து மலர்கள் அல்ல; தெருவோரப் பூக்கள்’ என்கிறார் கவிஞர்.  மாளிகைத் தோட்டத்துப் பூக்கள் மாடத்திற்கு மட்டும் சொந்தமாகலாம்.  அரண்மனைத் தோட்டத்துப் பூக்கள் அந்தப்புரத்திற்கு மட்டும் சொந்தமாகலாம். தெருவோரப் பூக்கள் மட்டுமே தேர் மீது பவனி வரும் தெய்வம் போல் விரும்பும் அனைவருக்கும் சொந்தமாகலாம் அல்லவா?

டப்படில்ஸ் (Daffodils) மீது வேர்ட்ஸ்வர்த் (Wordsworth) கொண்ட மோகம் போல், அபிராமி பட்டர் தாமரை மீது கொண்ட ஆசை போல் இக்கவிஞருக்கு மலர்கள் என்றால் இத்தனை பிரியமா!  அதன் காரணம் அவரை ஈன்றதும் ஒரு மலரல்லவா!  செண்பகவல்லி எனும் மலர் அல்லவா! அதுதான் கவிஞரின் டிசம்பர் பூக்களுக்கு இத்தனை மணமா! அவரது ரோஜாவிற்கு இத்தனை அழகா!

குறிஞ்சி நிலம் என்றால் கொள்ளை ஆசை போலும்!  பறவைக் கூட்டங்கள் அவரைப் பிரமிக்க வைக்கின்றன.  காவிரி ஆறும் அவரைக் கவர்வது – அதன் கரையில்தானே அவர் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கங்கை அவரது கவித்திறனைக் கரை புரண்டோட வைத்திருக்கிறாள் என்றால் மிகையாகாது!

பார் மகளே பார், அரசின் தொட்டிலெல்லாம், தங்க மகள், தாய்மைக்குப் பழி நேர்ந்தால், தாய் மனம் என்ற பாடல்கள் அத்தனையும் பெண்மைக்கும் தாய்மைக்கும் கவிஞர் தரும் மதிப்பையும் மரியாதையையும் எடுத்துரைக்கின்றன.  அதே சமயம் அவர் மனதின் அடித்தளத்தில் இருக்கூம் ஒரு வலியையும் உணர்த்துகின்றனவே!
மனிதாபிமான அவரது குணம் என்பதைப் பல பாடல்கள் பறை சாற்றுகின்றன. அதில் தலையாயது “கடலோர நினைவுகள்”, “தேசிய ஒற்றுமை”யில் ‘காஷ்மீரத்துப் பனிமலரால் கன்னியாகுமரியை அலங்கரிப்போம் கங்கையை இணையச் செய்து காவிரி கரையைச் செழிக்க வைப்போம்’ என்ற அடிகளில் பாரதியின் குணமும் மணமும் வீசுகின்றதே!

“மண்ணில் ஊர்ந்திடும் பூச்சிகளுக்கு மாக்கோலமிட்டு விருந்து வைப்போம்” எனும் அடிகள் நூலைப் படிப்போர் அனைவரின் மனதிலும் கோலமிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பாடல்கள் அனைத்தும் கவிஞர் கூறுவது போல் தெருவோரப் பூக்கள் அல்ல.  காகிதப் பூக்களும் அல்ல’ ‘”சிகால்” எனும் எங்கள் இல்லத் தோட்டத்தில் பூத்த பவளமல்லிப் பூக்கள்தாம்!

அவற்றை முகர்ந்து பாருங்கள்! நான் கூறுவது உண்மையென்று உங்களுக்குப் புரியும்.  இத்தகு நறுமணம் வீசிக்கொண்டே கவிஞரின் திறன் மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.  அன்னை அபிராமி கவிஞர் வேல்முருகனுக்கு வழித்துணையாக இருக்க வேண்டுகிறேன்.

     
Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com