
ஸ்ரீஆதிசங்கரர் சம்ஸ்கிருதத்தில் அருளிய
ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்
- தமிழாக்கம்
மகிழ்ச்சி பொங்க மோதகத்தைக் கரத்தில் கொண்டு விளங்குவாய்
மனம் லயித்து முயல்வோருக்கெல்லாம் முக்தி வழி காட்டுவாய்!
பிறை மதியைச் சிரசு தன்னில் பொலிவுடனே சூட்டுவாய்!
பேருலகம் ஏழினையும் பெருமையுறக் காத்திடுவாய்!
தலைவர்கள் அனைவருக்கும் தலைவனாக வீற்றிடுவாய்!
தலைவணங்கும் அனைவருக்கும் சரணாலயமாய்த் திகழ்ந்திடுவாய்!
யானை முக அசுரனையும் வெற்றி கொண்ட விநாயகனே!
ஈரம் மிக்க உன்னை நான் என்றும் வணங்கி மகிழுவேன்!
உன்னை அணுகி வணங்காதவர்க்கு அச்சமதைக் கொடுத்திடுவாய்
அணுகி உன்னை வணங்குவோர்க்கு ஆபத்தைப் போக்கிடுவாய்!
ஒளிவீசும் பாணியிலே உதய சூரியனை மிஞ்சிடுவாய்
அசுரர்களும் தேவர்களும் உன்தாள் வணங்கச் செய்திடுவாய்!
தேவர்க்குத் தலைவனே! யாவர்க்கும் முதல்வனே!
யானைமுகக் கடவுளே! தடைகளெல்லாம் களைபவனே!
உயர்வானவற்றுள் உயர்ந்தவனே! உறுதி மிக்க நிரந்தரனே!
உன்னை என்றும் அணுகி நான் சரணடைந்து வணங்கிடுவேன்!
ஈரேழு உலகனைத்தும் மகிழ்ச்சி காணச் செய்திடுவாய்
இன்னல் செய்யும் அசுரர் எல்லாம் இல்லாமல் ஆக்கிடுவாய்!
செழிப்புடனே தொங்குகின்ற பெரும் தொந்திதனை உடையவனே!
பெரும் கருணைக்கு இருப்பிடமே! தவறுகளைப் பொறுப்பவனே!
வணங்குவோர்க்குப் புகலிடமே! புகழ் சேர்க்கும் பெரும் செல்வனே!
ஊக்கத்தைக் கொடுப்பவனே! இனிய வாழ்வு சேர்ப்பவனே!
தங்கம் போல் ஜொலிப்பவனே! தரணிக்கு மூலவனே!
தலைதாழ்த்தி உன்னை நான் விரும்பி என்றும் வணங்குவேன்!
வறியவர்கள் துயரம்தனை நொடியினிலே போக்கிடுவாய்
வளமை தரும் நான்மறையின் இருப்பிடமாய் நிலைத்திடுவாய்!
திரிபுரம் எரித்த சிவனாரின் மைந்தர்களில் மூத்தவனே!
தேவருக்குத் துன்பம் தந்த அசுரர்களைத் துடைத்தவனே!
ஜகத்தை அழிக்கும் யமனுக்குப் பயத்தை அளிக்கும் உத்தமனே!
அக்னி போன்ற தேவர்க்கு அழகுதனைக் கொடுப்பவனே!
மத நீர்ப்பெருக்குப் பொங்கிடும் கதுப்புகளை உடையவனே!
மாதவர்கள் போற்றும் உன்னை நான் சரணடைந்து வணங்குவேன்!
மனத்தால் எண்ணிப் பார்க்க இயலா அழகு உருவம் கொண்டவனே!
மலர்ச்சிமிகு எழில் தந்தப் பற்களையும் உடையவனே!
பக்தர்தம் இடையூறுகளைக் களைபவனே!
பரமயோகியரின் மனத்தில் இடையறாது வசிப்பவனே!
யமனை உதைத்த சிவனின் செல்லப் பிள்ளையே!
அழகில் உனக்கு ஒப்பானவர் எங்கும் யாரும் இல்லையே!
சுடர்வீசும் ஒற்றையாம் கொம்பு தன்னை உடையவனே!
தூய உனது திருவடியை நாடி நானும் வணங்குவேன்.
காலைவேளைதனில் கணேசனை மனத்தால் நினைத்து வணங்குவார்
சீலமிகு வாழ்வுதனை நீண்ட காலம் பெற்று வாழுவார்!
குற்றமற்ற மனநிலையைக் குறைவில்லாமல் கொண்டிடுவார்!
குன்றுபோல் மகிழ்ச்சியை என்றும் தாமே பெற்றிடுவார்!
கேட்போரை மயங்க வைக்கும் வாக்கு வன்மை அடைந்திடுவார்!
ஏற்றமிகு சுற்றத்தை இயல்பாகக் கண்டிடுவார்
உயர் விநாயகரின் ரத்ன மாலைதனை ஓதிடுவார்
உலகமெல்லாம் போற்றும்வண்ணம் புவிமீது வாழ்ந்திடுவார்!