நின்றவாறு இருப்பதேன் சங்கரரே !!

அத்வைத தத்துவத்தை உலகோர்க்கு அளித்தவரே !
அழகுமிகு உம் தோற்றம் ஆன்மஒளித் தோற்றமன்றோ !
சிவகுருநாதரின் குலவிளக்காய் வந்தவரே
சீர்மேவு காஞசிதான் நீவிர் தேர்ந்தெடுத்த இருப்பிடமோ !
ஆரியாம்பாள் பெறறெடுத்த அற்புதப் புத்திரரே !
ஆகாயமே உமக்கு அகன்ற விதானமாமோ !
சூரியனும் சந்திரனும் உமக்குத் தீபமேற்றி நின்றவரோ !
சுடரொளித் தாரகைகள் உமக்கு வழிகாட்ட வந்தனவோ !
கரிய மழைமேகங்கள் உமக்குக் குடைபிடிக்க முயன்றவோ !
மழைத்துளிச்சாரல்கள் உம்மீது பன்னீராய்ப் பொழிந்தனவோ !
பொதிகைத் தென்றலுமே உமக்கு வெண்சாமரம் ஆனதுவோ !
போற்றும் நான்மறைகள் புகல்வதெலாம் உம் நாமமதோ !
உயர்திருக் காலடியில் உதித்தவரே
உருவத்தால் நீரே உலகளந்த உத்தமரே !
சேர நன்னாட்டில் பிறந்திட்டாலும் சங்கரரே ௲ இப்
பாரத நன்னாடே நீர் வணங்கும் புண்ணிய பூமியன்றோ !
அன்னையின் அழகு வெள்ளத்தில் ஆழந்து குளித்தவரே,
அன்புடன் அதனை எமக்கு அளந்து அளித்தீரோ !
சிவஆனந்தம் எனும் கடலின் கரையைக் கண்டவரே
திருமாலின் நாமங்கள் ஆயிரத்தின் பொருளை எமக்குத் தந்தீரோ !
அவன் உபதேச கீதையின் எமக்குப் புரியுமாறு பகன்றீரோ !
தொந்திக் கணபதியும் திருச்செந்தூர் வேலவனும்
மங்கையர்க்கரசியாம் மதுரையம்பதி மீனாட்சியுமி
திரிபுரசுந்தரி முதல் தூய்மையான கங்கை வரை
உமது பாசுரம் கேட்டு ஓடோடி வர மாட்டாரோ ?
எழில்மிகு திருமகளும் நீர் அழைத்தவுடன் வந்துநின்று
ஏழை மூதாட்டிக்குப் பொன்மழையாய் நெல்லிக் கனிகளை ஈன்றாளே !
ஏழுகுன்றில் வாழவேங்கடனும் உம் யந்திரத்தை ஏற்றாரே !
ஏகாம்பரநாதரின் உயிர்நாடியாம் தேவி காமாட்சியும்
ஏற்றமிகு திருச்சக்கரத்தைக் களிப்புடனே ஏற்றாளே !
அகிலாண்டநாயகியும் நீர் அளித்த தோடுகளை
ஆர்த்தெழுந்த கோபம் தணிந்திடவும் அணிந்தாளே !
“எத்தனையோ இடங்களில் ‘அமர்ந்த’ கோலத்தில் இருக்கும் நீர்
ஏனாத்தூர் திருத்தலத்தில் மட்டும் நின்றவாறு இருப்பதேன் சங்கரரே !
என்று ஓயாமல் என்னையே இத்தனை நாள் கேட்டு வந்தேன்;
இத்தனைநாள் புரியாத புதிர்தான் இன்று பொருளுடன் புரிந்ததய்யா !
“ஓய்ந்து உட்கார இன்னும் எத்தனையோ யுகமுண்டு ;
நின்றபடி இருந்தால்தான் நாடெங்கும் நடந்தவண்ணம்
அமராமல் இருந்தால்தான் அகிலமெலாம் உணரும் வண்ணம்
நம்மதத்தைப் பறைசாற்றி மக்கள் நற்பயன்பெறவே
நடைப்பயணம் சென்றிடலாம்” என்று சொல்லாமல் சொன்னீரோ ?

     
�Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com