"காலமெல்லாம் வசந்தம்" நூல் வெளியீட்டு விழா

அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம் புயமும்
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்க்கும் அவையில் அமர்ந்திருக்கும் சான்றோர், நீதி காக்கும் கரங்கள், சகோதர சகோதரிகள், குழந்தைகள், நீதியரசரின் சுற்றம் மற்றும் நட்பு அனைவருக்கும் என் பணிவான வணக்கம். நான் கோவிலாகக் கருதும் இம்மேடையில் பல அறிஞர்களின் இடையில் எனக்கும் பேசும் வாய்ப்பளித்த நீதியரசர் திரு.ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் தும்பைப் பூ போன்ற வெள்ளைக் கதராடை உடுத்தி, தாம்பூலம் தரித்த முகப் பொலிவுடன் அய்யா அவர்கள் எங்கள் இல்லத்திற்கு என் கணவர் திரு.ஏ.சி.எம் அவர்களைக் காண வருவார்கள். என் கணவர் என்னிடம் "சீக்கிரமாய் போய் அய்யாவை வரவேற்று உட்காரவைத்து காப்பி கொடுக்கச் செய், நான் பத்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்" என்று கூறுவார். நான் சென்று அய்யா அவர்களை வரவேற்று செய்தியைக் கூறினால் "தம்பி மெதுவாக வரட்டும் தாயி, நான் உட்கார்ந்திருக்கிறேன்" என்று கூறுவார்கள். தாயி என்ற சொல்லில்தான் எத்தனை கனிவு பெருகும். மூப்பனார் அய்யாவின் மறைவிற்குப் பின்னால் இந்தக் கனிவை இனிக் காண்போமா, கேட்போமா என்று நினைக்கையில் அதே தும்பைப் பூ போன்ற கதராடை அதே முகம், அதே நடை, அதே கனிவுடன் அவர்தம் மகனை விட்டுச் சென்றிருக்கின்றார் அய்யா அவர்கள். மூப்பனார் அய்யா அவர்களின் திருமகனாரும் "தம்பி" என்று பலராலும் அன்புடன் அழைக்கப் பெறும் மாண்புமிகு அமைச்சர் திரு.வாசன் அவர்களே. நீங்கள் தலைமை ஏற்கும் மேடையில் பேசும் வாய்ப்பினைப் பெற்றதை நான் பெறும் பேறாகக் கருதுகின்றேன்.

பெயரில் வீரம் நிறைந்த ஓர் உயர்ந்த மணி. இவர் செய்யும் தொழிலோ ஜம்மென்று இயங்கும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனம். சிரித்த முகம். எங்கு கண்டாலும் இனிமையாகப் பேசும் சுபாவம். சிலைகளைக் கலைஞர்கள் வடித்தாலும் அவற்றிற்கு பொலிவூட்டும் பீடங்களைத் தயாரித்துத் தருபவர் இவர். அலுவலகக் கட்டிடங்கள், அரண்மனைகள், ஆடம்பர மாளிகைகள், ஆலயங்கள், மணி மண்டபங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் அவற்றின் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் என்று அனைத்தையும் படைக்கும் படைப்பாளர். செய்யும் தொழில் கடினமான கருங்கல்லைச் சார்ந்ததாக இருப்பினும், மனத்தால் மென்மையானவர். சகோதரர் வீரமணி அய்யா அவர்களுக்கு என் வணக்கம்.

நிறத்தாலும், தரத்தாலும் குயிலுக்கு ஒப்பானவர். கவி பாடுவது இவரது தொழில் மட்டுமல்ல இவரது பேச்சு, மூச்சு என்றே கூறலாம். கவிப் பேரரசு வைரமுத்துவின் கவிதைத் திறம் பற்றி கூற ஒரு நாள் என்ன பல நாட்கள் போதாது. எட்ட இருந்து மட்டுமே ரசிக்க வைத்த இவரது கவி பாடும் திறனை இன்று கிட்ட இருந்து ரசிக்கும் வாய்ப்பினை நல்கியுள்ளார் நீதியரசர். வாய்ப்பிற்கு தமிழ்த்தாயின் மகவுகள் நாங்கள் என்ற தகுதியோடு இன்றும் ஒரு தகுதிதான் எனக்குப் புலப்பெறுகிகின்றது. கவிஞர் அய்யா பச்சையப்பர் கல்லூரியில் உங்களது தமிழ் ஆசிரியர் சி.பாவின் மாணவிதான் நானும் என்பதனை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.

திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் பேருக்கு ஏற்றாற் போல் சாந்தமானவர். பார்வைக்கு என்றைக்கும் இளமைத் தோற்றமுடைய குமாரி. இப்பொழுது நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டு வருகின்றார் என்று குறிப்பாக காண்கின்றேன். இவரது எழுத்துக்கள் பல இதழ்களில் வெளி வருகின்றன. பல நூல்களாக வடிவெடுத்தும் உள்ளன. இவரது கருப்புச் சிலந்தி வலையை விட்டு இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கின்றது. சாந்தகுமாரி சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைத் தினம் பாடி பாடி சிவனின் கடாட்சத்தை முழுமையாகப் பெற்றவர். இத்தகைய சான்றோர் மத்தியில் எனக்கும் இடம் கொடுத்துப் பேச வாய்ப்பளித்திருக்கின்றது நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணனின் சுயசரிதை நூலாகிய "காலமெல்லாம் வசந்தம்" எனும் நூல். இந்நூலுக்கு முகவுரை எழுத வேண்டி அதனைக் கையில் கொடுத்தவுடன் என் கணவர் "அது என்ன காலங்களில் அவள் வசந்தம் எனும் கண்ணாதாசன் பாட்டா?" என்றார். அவருக்குக் கண்ணதாசன் என்றால் ரொம்பப் பிடிக்கும். காலங்களில் அவள் வசந்தம் எனும் சினிமாப் பாட்டு கண்ணதாசன் எழுதியதுதான். ஆனால் அந்தப் பாட்டிற்கு அவருக்கு அடி எடுத்துக் கொடுத்தது ஸ்ரீகிருஷண பரமாத்மா" என்றேன். ஆம் சுயசரிதை என்று முதல் முதல் எழுதியது பகவரன் ஸ்ரீ மஉறா விஷ்ணுதான். பகவத்கீதையில் அந்தப் பார்த்தனுக்குப் பரந்தாமன் தனது விபூதியோகங்களை எடுத்துரைக்கின்றார். விபூதிகள் என்பது இறைவனின் குணாதிசயங்கள். Macroscopic and Microscopic glories of the Lord. படைப்பில் எல்லாப் பொருள்களிலும் தான் இருந்தாலும் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இறைவன் கூறுகின்றார். மலைகளில் மேரு, ஒளிகளில் சூரியன், நட்சத்திரங்களில் சந்திரன், மரங்களில் அரசு, ஆறுகளில் கங்கை, ருதுக்களில் வசந்தம் என்றெல்லாம் கூறி, கீர்த்தி , ஞாபகசக்தி, புத்தி, திடசித்தம், பொறுமை என்ற குணங்களுக்கு அதிஷ்டானம் நானே. அடக்கியாள்பவரிடம் அடக்கும் சக்தியாக இருக்கின்றேன். ஜெயிக்க விரும்புவோர்களிடம் நீதியாக இருக்கின்றேன். ரகசியமான விஷயங்களில் மௌனமாகவம், ஞானிகளிடம் ஞானமாகவும் இருக்கின்றேன் என்கிறார். நீதியரசரின் நூலைப் படித்துவிட்டு பின்பு விபூதியோகத்தை ஒரு கீதா உபாசகரிடம் கற்றுக் கொண்டு மீண்டும் நூலைப் படித்துப் பார்த்தேன், மெய்சிலிர்த்தேன்!! இறைவனின் பல குணங்கள் பல இடங்களில் இந்த சுயசரிதையில் எனக்குப் பிரதிபலிப்பது புலப்பட்டது. ஒருவரது வாழ்க்கை வரலாற்றை, பிறர் எழுதுவதைக் காட்டிலும் தானே எழுதுவதில் மேன்மைகள் பல உள. பிறர் எடுத்துக்காட்ட இயலாத உணர்ச்சிகளும் பாவங்களும் சுயசரிதைகளில் அமைகின்றன. பிறரது சொற்களில் பெற இயலாத உண்மை வடிவம் சுய சொற்களின் வாயிலாகப் பெற இயல்கின்றது. இறைவன் ஒவ்வொன்றையும் ஒரு நோக்கத்துடனேயே படைக்கின்றார். பிரபஞ்சம் இறைவனுடையது. நாம் ஒவ்வொருவரும் அவன் காரியத்திற்காகவே படைக்கப் பெறுகின்றோம். நம்மை ஒரு நற்காரியத்திற்காக அவன் ஆக்கினான் எனில் மகிழ்வு. அத்தகைய ஒரு நற்கருவியாக இறைவனின் திருவருளால் என் வாழ்வு மலர்ந்தது. இறைவன் திருப்பணியைச் செய்கின்றேன் எனுமளவிற்கு இறைவனாகவே - நீதி தேவதையாக Oh Lord! என்று விளித்து என்னை அவர் பேரருள் மாற்றியதற்கு நான் இறைவன் திருப்பாதங்களுக்கு எவ்வாறு நன்றி கூற இயலும் என்கின்றார், ஆசிரியர்.

ஒன்பது பகுதிகள் கொண்ட இச் சுயசரிதையில் நுழைவு வாயில் தாண்டிச் சென்றால் முதலில் அமைவது "குலப்பெருமை" எனும் தலைப்புப் பகுதி. காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், கற்புக்கரசி கண்ணகி, கம்பரை வளர்த்த சடையப்பர் தோன்றிய குலத்தில் இரணியூர் கோவில் பிரிவில் தேவகோட்டை "புலிகுலத்தார்" வீட்டில் பிறந்திருக்கின்றார் நீதியரசர். இவர் தனது இளமைக்காலம், பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, தனது பாட்டனார், பெற்றோர் என்று தான் வளர்ந்த சூழ்நிலை பற்றி கூறுவது "மலர்ந்த பொழுதினில்" எனும் பகுதியில். "உயர்த்திய உழைப்பு" எனும் தலைப்புப் பகுதியில் தான் நீதித்துறையில் பட்டம் பெற்றாலும் குடும்பத் தொழிலான வட்டித் தொழிலை முதலில் பழகி பின்பு நீதியரசர் கே.வீராசாமியின் அருட்பார்வையால் நீதித்துறைக்கு வந்தமை கூறுகின்றார். 1968ல் வழக்கறிஞராகப் பதிவு செய்ததில் தொடங்கி 1990ல் நீதிபதியாக நியமனம் செய்யும் வரையில் ஏறத்தாழ ‏22 ஆண்டுகளில் இடையறா உழைப்பே வழி வகுத்தது என்கின்றார் நீதியரசர்.

"தீர்ப்புகளும் நானும்" எனும் ஐந்தாவது பகுதியில் நாட்டின் நலம் காக்க இவர் வழங்கிய பல தீர்ப்புகள் உள. தீர்ப்பு வழங்கும் நேரங்களில் தனது உணர்ச்சிகள் அறிவினைக் காட்டிலும் மேலோங்கிடாது சமமான மனநிலை மட்டுமே நிலவ வேண்டும் என்ற கருத்துடன் செயலாற்றியது பற்றி கூறுகின்றார்.

"மஉறான்களின் கருணையில்" எனும் பகுதி இவர் வாழ்க்கையில் உயர்ந்த பாதிப்புக்களை ஏற்படுத்திய மஉறான்களைப் பற்றியதாகும். "நேசமும் சுவாசமும்" எனும் அடுத்த பகுதி நீதியரசருக்குத் தமிழின் பால், கவிதையின் பால், இசையின் பால் உள்ள ஈடுபாட்டினைக் கூறும். கம்பனை, வள்ளுவனை, இளங்கோவை, பாரதியை, கண்ணதாசனை தமிழால் காதலித்தேன் என்கிறார் ஆசிரியர். "ஆலமரம்" எனும் பகுதி நீதியரசரின் குடும்பம் பற்றிய செய்திகளைக் கொண்டது. இவர் பெயரால் மட்டும் இளவலான இலக்குவன் (இலட்சுமணன்) ஆகின்றார். குணத்தாலும் உடன் பிறப்புகளைற அணைக்கும் திறத்தாலும் தர்மம் காக்கும் பொறுப்பாலும் இராமராகவே ஆகின்றார் என்றால் மிகையாகாது. அவர் தம் மனைவி மீனாட்சி ஆச்சி பற்றிக் கூறும் நீதியரசரது வார்த்தைகள் நம் கண்களில் நீர் பூக்கச் செய்பவை. தன் வாழ்க்கையின் ஆணி வேர் என்று மனைவியைக் கூறும் நீதியரசர் அவர்கள் தனக்கு இறைவன் தந்த பரிசு என்கின்றார். 50 ஆண்டுகள் அன்புடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தெய்வீகத் தம்பதியர் உலகத்தார்க்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு. இவரது அன்புக் குழந்தைகள் இவர்களுக்கு இறைவன் கொடுத்த அளப்பரிய சொத்து.

அடுத்தது "சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள்" எனும் பகுதி. இதில் பல்வேறு வழக்குகளையும் அவற்றிற்கு இவர் வழங்கிய தீர்ப்புகளையும் பரிந்துரைகளையும் பற்றிக் கூறுகின்றார்.

வெற்றிப் பாதையில் எனும் கடைப் பகுதி நீதியரசரின் குணாதிசயங்களைக் காணலாம். இவரது இறை நம்பிககை, பண்பு , நேரம் தவறாமை, உழைப்பு, கண்டிப்பு, என்று அளவில்லாத நற்குணங்கள் இக்காலத்தவர்க்கும் பிற்காலத்தவர்க்கும் நல்ல பாட போதனை என்றும் நினைவில் நிலைத்து நிற்கக்கூடிய மணிமணியான செய்திகள் சில - நீதியரசரின் வார்த்தைகளில், "உங்களுக்கு ஓய்வு எப்போது எனப் பலர் என்னிடம் கேட்பார்கள், மாற்றுப் பணியையே நான் ஓய்வாகக் கருதுகின்றேன். நான் எப்போதும் சுதந்திரமாகவே இருப்பதற்குப் பிரியப்படுவேன். யாருக்கும் அடிபணிந்து போகமாட்டேன். அன்பிற்குக் கட்டுப்படுவேன்.சிறு வயதிலிருந்தே தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருப்பேன்"

வீட்டைத் தாண்டி நாட்டையே தனது வீடாகக் கொண்டு அதன் நலம் கருதி வாழ்ந்தவர், வாழ்பவர், வாழப்போகின்றவர் நம் நீதியரசர்.

உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த குணங்கள் உள்ள ஒருவருக்கு வாழக்கை "காலமெல்லாம் வசந்தமாக" அமைவதில் ஆச்சரியமே கிடையாது. அருமையாக எழுதி, அருமையாக வடிவமைக்கப் பெற்றுள்ள இந்நூலைப் படித்தும் பாருங்கள் பின்னர் நான் கூறியவற்றை ஒப்புக் கொள்வீர்கள் என்று கூறி இந்த நல்ல வாய்ப்பினை எனக்கு நல்கிய நீதியரசருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, என்னை என்றும் காக்கும் திருக்கடவூர்த் தாய் அபிராமியைப் போற்றி வணங்கி விடை பெறுகின்றேன்.

வணக்கம்.

     
Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com