அருள்கூர்ந்து செவி சாய்ப்பீர்

ஐம்புலன்களுள் ஒன்று கேட்கும் சக்தி. வெளியில் உண்டாகும் ஓசையை வாங்கி மூளைக்குப் பாய்ச்சுவது காது எனப்பெறும் செவியாகும். சிவபெருமானின் உடுக்கை ( ‘டமருக’ ) ஒலி முதல் ஓசையாகும். அந்த ஒலியை - ஓம்கார நாதத்தைப் பெற்று அதனை அறிவிற்கு அறிவிப்பது செவி!! சற்று சிந்தித்துப் பாருங்கள். ஓம்காரம், ஒலி என்ற இரண்டு சொற்களிலும் ‘ஓ’ எனும் எழுத்து உள்ளது. ஒலியை வாங்கிக் கொள்ளும் காதும் ‘ஓ’ என்ற எழுத்து வடிவில்தான் அமைந்து உள்ளது. கருவில் உண்டாகும் குழவியின் வடிவமும் ‘ஓ’ என்ற வடிவத்தில் அமைந்திருக்கின்றது. “ ‘ஓ’ எனும் எழுத்து தமிழ் மொழியில் மட்டுமே அமைந்திருக்கும் சிறப்பு எழுத்தாகும்” என்று முன்னாள் காவல் துறை மேலாளர் திரு ஸ்ரீபால் ஒரு சொற்பொழிவில் கூறியதை என் காதால் கேட்டிருக்கின்றேன்.

திருவள்ளுவர் செவிப்புலன் மகத்துவம் கூற “கேள்வி” என்று ஒரு அகராதியையே படைத்திருக்கின்றார். 42-வது அகராதியான “கேள்வி” எனும் அதிகாரத்தில் “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”
என்று கேள்வி ஞானத்தின் பெருமையைக் கூறுவார்.

“செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்”

என்பது குறள். செவிக்கு உணவான கேள்வி இல்லாத காலத்து வயிற்றுக்குச் சிறிது உணவு இடப்படும் என்றால், செவிக்குக் கேள்வி சிறப்பாக அமையப் பெற்றால் வயிற்றிற்கு உணவே தேவையிராது என்பதாகும்.

“நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது”

எனும் குறள், நுட்பமான கேள்வி அறிவு இல்லாதார் வணக்கத்திற்குரிய சொல்வன்மை வாய்த்தவர் ஆதல் அரிது என்று பொருள் பெறும்.

எழுத்து வடிவில் முதலில் அமையாத வேதம் - மறை செவி வழியாகத்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றது. புராணங்களும் செவி வழிச் செய்திகளாகவே முதலில் அமைந்து பின்பு எழுத்து வடிவம் கொண்டன. காரணம் காகிதம், பேனா, மை இவையெல்லாம் பிற்காலத்தில்தான் உண்டாயின. எழுதும் கைக்கும், பார்க்கும் கண்ணிற்கும் மூத்த புலன் கேட்கும் செவி. இதன் காரணமாகவே ஒருவர் எழுதியதை நாம் படிக்காவிட்டாலும் அவர் பேசியது நம் மனதில் நன்றாகவே பதியும். படித்ததைவிடக் கேட்பதே வெகு நாட்களுக்கு மனதைவிட்டு மறையாமல் அமையும்.

காதைப் பற்றிய அன்றாடப் பேச்சு வழக்கில் உள்ள செய்திகள் சில. "நான் காலையில் இருந்து கத்திக் கொண்டே இருக்கிறேன். அதை அவர் காதிலே வாங்கிக் கொள்ளவே இல்லை".. இது கணவன் மீது மனைவி கூறும் புகார். "அந்தக் கல்யாணத்தைக் காதும் காதும் வைத்த மாதிரி பேசி முடித்து விட்டார்கள்" என்றால் வெளியில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக முடித்து விட்டார்கள் என்று பொருள். “என் காதிலே என்ன பூவா” என்றால் ‘எனக்கு ஒன்றும் தெரியாதா’ என்று பொருள். “அவனுக்குப் பாம்பு செவி” என்றால் ரொம்பவும் உஷாரான கேள்வி உடையவர் என்று பொருள். பாம்பிற்கு செவி கிடயாது. ஆனாலும் அதன் உடல் முழுவதும் கேள்வி உணர்வு உண்டு. இதன் எதிர்மறை வெளவால் எனும் பிராணி. அதற்குப் பார்வை கிடயாது. செவியால் உணர்ந்து ஒலியைத் தொடர்ந்துதான் நகரும். காதில் விழும் செய்தி நல்லது என்றால் அதை மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். சரியில்லாத செய்தி என்றால் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் வெளிப்படுத்தி விடவேண்டும். காது பெரிதாக அமைந்து இருப்பவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று கூறுவார்கள். இதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

குழந்தைகளுக்குக் காதுகுத்தி தோடு போடுவது என்பது மங்கலமான விழா. காது குத்துவதால் அந்த நரம்பு வலுப்படுகின்றது. காதுத் துளையில் சொர்ண அணியின் ஸ்பரிஸம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றுதான் காதணி போடுகின்றனர். காதில் அணியும் பிற அணிகலன்கள் தொங்கட்டம், ஜிமிக்கி, மாட்டல் கொன்னப்பூ போன்றவை. இறைவனின் காதணி தோடு அம்பிகையின் காதணி தாடங்கம் .. இறைவி காலத்திற்கும் அப்பாற்பட்டவள் என்பதற்காக அவளது தாடங்கம் - சூரிய சந்திரர் என்று கூறுவர். இந்தக் காதணியை வானில் வீசித்தான் பட்டருக்கு அமவாசையன்று முழு நிலவைக் காட்டி அருள் புரிந்தாள் அபிராமி. பிரதோஷ வேளையில் நந்திக்கு அபிஷேகம் நடந்தவுடன் அதன் காதில் நமது விருப்பங்களைக் கூறினால் அது உடன் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பகீரதனின் கடும் தவத்தால் கங்கையைப் பூலோகத்திற்குக் கொண்டு வந்தான். அவளது ஆக்ரோஷத்தைக் குறைப்பதற்காக சிவபெருமான் அவளைத் தனது ஜடை முடியில் தாங்கிக் குறைந்த வேகத்துடன் பூமியில் விழச் செய்தார். கங்கையின் வேகத்தை மேலும் குறைக்க அவளை ஜன்னு முனிவர் உண்டு காதின் வழியாகப் பாயச் செய்தார். இதன் காரணத்தால் கங்கைக்கு ‘ஜானவி’ என்றும் பெயர் உள்ளது. இதனால் நம் அனைவரது வலது காதிலும் கங்கை பாய்வதாக நம்பிக்கை. இதன் காரணமாகவே பூஜைகள் நடக்கும்போது தும்மலோ, கொட்டாவியோ வந்துவிட்டால் அந்த தோஷத்தைப் போக்க வலது காதைக் கையால் தொட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளது.

ஞானசம்பந்தக் குழந்தையின் முதல் பாடலே “தோடுடைய செவியன்” இல்லயா? இப்பாடலை இசைப் பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் எழுதிப் படித்தால் இன்பமா? பாடிக்கேட்டால் இன்பமா? எழுதிப் படித்தால் ஆனந்தமாக இருக்கும், ஆனால் பாடிக் கேட்டால் பரமானந்தமாக இருக்கும்!!

இக்கட்டுரையின் முக்கியமான பிற்பகுதி இது. நான் யார் யாருக்கெல்லாம் வேண்டியவள் என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள். சர்வஜித் வருடம் மார்கழி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கலைமாமணி இசைப் பேரறிஞர் தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசைச் சங்கத்தார்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார். தமிழ் இசைச் சங்கத்தில் என் கணவர் டாக்டர் திரு ஏ.ஸி.முத்தையா அவர்கள் மதிப்பியல் செயலர் என்ற காரணத்திற்காக அவரை மேடையில் அமர்த்தி அவர் அருகில் அவர் மனைவி எனும் உயர்ந்த ஸ்தானத்திற்காக என்னையும் அருகில் அமர்த்தி கூடை கூடையாக மலர்கள் கொண்டு அபிஷேகம் நடத்தினார். சாதாரண ஒருவரே நம்முள் இருக்கும் தெய்வத்தைப் பாராட்டி மாலை அணிவித்தாலே நமது உடல் சிலிர்க்கும். இத்தனை ஆண்டுகளாக திருமுறைகளே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் அருளாளர் தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் கையால் பூமழை பொழிந்ததும் எங்கள் இருவரையுமே ஏதோ சொல்ல முடியாத அளவு உணர்ச்சி வசப்படச் செய்தது. அவர் திருக்கரத்தால் எங்கள் சஷ்டியப்தபூர்த்தி விழாவின்போது புனித நீராட்டு கிடைத்தது எங்களுக்குக் கிட்டிய பேறு. இரண்டாவது முறையாக எங்கள் பாட்டனார் பெயர் கூறும் அண்ணாமலை மன்றத்தில் அவர் உண்டாக்கிய தமிழ் இசைச் சங்கத்தில் பூமழை பொழிந்தது எங்களுக்குக் கிட்டிய பெரும் பேறு, ஐயா அவர்கள் என்னைச் சில கட்டுரைகள் எழுதவேண்டும் என்று அன்பு ஆணை இட்டார். அபிராமியின் அருளோடு எழுத முனைகின்றேன். ஆனால் அவர் கூறிய ஒரே ஒரு வார்த்தை மட்டும் என் மனதை மிகவும் பாதித்தது. நெருடிக் கொண்டே நோகச் செய்தது. அவர் சுமார் பதினைந்து முறைக்கு மேல் “ஆச்சி அவர்கள் தருமபுரம் சந்நிதானத்திற்கு மிகவும் வேண்டியவர்கள்” என்று கூறிய வார்த்தைகளே அவை, பத்து நாட்களாக அதை நினைத்து நினைத்து வருந்தினாலும் சட்டென்று நேற்றுத்தான் எனக்குத் தௌவு பிறந்தது. நான் இத்தனைக் காலம் மறந்திருந்த நகரத்தார் வரலாற்றினைத்தான் அவர் நினைவூட்டினார் என்பது புரிந்தது. வரலாறு பின்வருவது :

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் குலத்துப் பெண்கள் யாருமே உயிரோடு இல்லாத நிலையில் இருந்தனர். நாட்டுக்கோட்டை நகரத்தார் ரத்ன மகுட வைசியர் என்பதால் மன்னனின் முடிசூட்டு விழாவை அவர்கள்தான் நடத்தி வைக்க வேண்டும். முடி சூட்டுவதற்குத் திருமணமானவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதால் உயிர் பிழைத்த ஒன்பது நகரத்து வாலிபர்களுக்கும் ஒன்பது கார்காத்த வேளாளர் குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் நகரத்தார் குலத்துப் பெண்கள் அனைவரும் கார்காத்த வேளாளர் குலத்தின் பெண் பிள்ளைகள் ஆவர். இதை நிலைநாட்டுவதற்காகவென்றே எங்கள் குலத்துப் பெண்கள் அனைவருக்கும் வேளாளர் குல மடமாகிய துலாவூர் திருமடத்தின் ஆதீனம்தான் உபதேசம் செய்து வைப்பார்கள், ஆண்களுக்கு நகரத்தார் மடமான பாதரக்குடி மடத்தின் ஆதீனம் உபதேசம் செய்து வைப்பார்கள். எனக்கு உபதேசம் செய்து வைத்தவர் துலாவூர் ஆதீனம் அழகிய நிரம்பிய தேசிகர் ஸ்வாமி அவர்கள். நேற்று தேவகோட்டையில் ஒரு சஷ்டியப்தபூர்த்திக்குச் சென்றிருந்தபோது இரண்டு மடாதிபதிகளையும் தரிசிக்கும் பேறு எங்களுக்குக் கிட்டியது. அவர்களை வணங்கியபோது துலாவூர் சுவாமிகள் விபூதி அளித்து “தீர்க்கசுமங்கலியாகவே இருக்க வேண்டும் ஆத்தா” என்று கூறி வாழ்த்தினார்கள். நான் மட்டுமல்ல எங்கள் குலத்துப் பெண்கள் அனைவருமே கார்காத்த வேளாளர் குலத்து மகள்களே, தருமபுர மடத்திற்கு வேண்டியவர்கள் அதனால் ஸன்னிதானத்திற்கு மிகவும் வேண்டியவர்கள். அது மட்டுமல்ல, புனிதவதியாராகப் பிறந்து ‘அம்மையே’ என்று சிவபெருமானால் அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் நான் வேண்டியவள்! மன்னனின் தவறான முடிவிற்காக மதுரையை தீக்கிரையாக்கிய கற்புக்கரசி கண்ணகிக்கும் நான் ரொம்ப வேண்டியவள்!!

மொத்தத்தில் அடியார்கள் எல்லோருக்கும் வேண்டியவள்! எங்கள் குல மரபை நினைவு கொள்ளச் செய்த பெரியவர் தருமபுரம் சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி. அவருக்கு ஒத்தாசையாக இயங்கிய விழா அமைப்பாளர்கள் அவர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி.

     
Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com