அழகிய மயிலே அபிராமி

அழகிய மயிலேஅபிராமி அருள்
மழை பொழிந்தெனை ஆளுகின்றாய்

வானத்தின் மீது மின்னல் வடிவில்
நொடியில் தோன்றி மறைகின்றாய்!

மணியாய் மணியின் ஒளியாய்
மாறி மாறி ஒளி வீசுகின்றாய்!

கோடி சூரியப் பிரகாசத்தையும்
மீறும் வண்ணம் ஒளிர்கின்றாய்!

ஜாதி மல்லிகை கெஞ்சிடவும்
தாழம்பூவது கொஞ்சிடவும்

பரிமளசுகந்தம் நாணிடவும் ஏலம்
லவங்கம் ஏங்கிடவும்

பன்னீர்த் துளிகள் வெருண்டிடவும்
பவழ மல்லிகை வாடிடவும்

எந்தன் இரு நாசிகளில் மனோரஞ்சிதமாய்
நீ மணம் கமழ்கின்றாய்!

செவிகளில் இன்னிசைத் தீங்குரலில்
குயிலாய் நீயும் கூவுகின்றாய்!

வேதம் பாடும் கிள்ளையென
விருப்புடன் கீதம் ஓதுகின்றாய்!
அலைகளின் ஓங்கார நாதத்தில்
அமுதக் குரலில் தாலாட்டுவாய்!
கருவண்டுகளின் ரீங்காரத்தில்
கருவாய் நீயும் ஒலித்திடுவாய்!

பசும்பாலை நானும் பருகினாற்போல்,
அதனுடன் தேனையும் கலந்தாற்போல்

சர்க்கரைப் பாகைச் சுவைத்தாற்போல்,
முக்கனி ரசத்தைப் பிழிந்தாற்போல்

சக்தி உந்தன் கரத்தினில் ஏந்திய
கரும்புதனைச் சுவைத்தாற்போல்

நின் நாமம் தன்னை உச்சரித்தால்
நுனிநாக்கில் நின்று இனிக்கின்றாய்!

தென்றல் காற்றாய் நீ வந்து எனைத்
தொட்டுத் தொட்டுத் தழுவுகிறாய்

ஆயிரம்கோடி சந்திரனின் குளிர்ச்சியை
என்மேல் பொழிகின்றாய்

அன்புடன் நெகிழ்ந்து வேண்டினால்
அடைக்கலம் தானே தருகின்றாய்

ஊனும் உயிரும் உருகிடவே ஏதோ
என்னைச் செய்கின்றாய்

என் இதயம் எனும் கோவிலிலே

ஒளித் தீபத்தை நீ ஏற்றுகின்றாய்

என் உள்ளம் என்னும் தாமரையில்

ஏற்றமுடன் வீற்றிருக்கின்றாய்

என் மனத்தின் இருளைப் போக்கும்

இன்சுடர் ஒளியாய் இருக்கின்றாய்!
மனமது தெளிந்து மகிழ்ந்திடவே

அதனுடன் தானே விளையாடுகின்றாய்!

அழகிய மயிலே அபிராமி! அருள்மழை

பொழிந்தெனைஆளுகின்றாய்!

     
�Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com